புயல் மீட்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடந்தது


புயல் மீட்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 Dec 2018 4:15 AM IST (Updated: 7 Dec 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

புயல் மீட்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அதிகாரி சுனில்பாலிவால் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் மீட்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரி சுனில் பாலிவால் தலைமை தாங்கினார். கலெக்டர் கணேஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரி சுனில் பாலிவால் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அனைத்திலும் நீரேற்றம் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல 30 ஆயிரம் லிட்டர் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. புயல் பாதித்த பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், இழப்பீட்டு பணிகளை மேலாய்வு செய்யும் பணிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 38 தாசில்தார்கள் வருகை புரிந்து தாலுகா வாரியாக மேலாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மேலாய்வு பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மின் வாரிய ஊழியர்களின் அயராத உழைப்பால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் கிராம பகுதிகளில் ஓரிரு இடங்களில் விரைவில் மின் இணைப்பு வழங்கப் படும். தமிழக அரசின் இத்தகைய விரைவான மீட்பு பணிகளின் மூலம் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை சீராகி வருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், பயிற்சி உதவி கலெக்டர்கள் பிராசாத், தினேஷ், பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story