நூதன மோசடியை தடுக்க செல்போனில் யார் பேசினாலும் ஏ.டி.எம்.கார்டு, ரகசிய குறியீடு எண்களை தெரிவிக்க வேண்டாம்


நூதன மோசடியை தடுக்க செல்போனில் யார் பேசினாலும் ஏ.டி.எம்.கார்டு, ரகசிய குறியீடு எண்களை தெரிவிக்க வேண்டாம்
x
தினத்தந்தி 7 Dec 2018 4:15 AM IST (Updated: 7 Dec 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

நூதன மோசடியை தடுக்க ஏ.டி.எம். கார்டு, ரகசிய குறியீடு எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சாமிநாதன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

திருச்சி,

வங்கி ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களிடம் அவர்கள் கார்டு வைத்திருக்கும் குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண் (9 இலக்கம்), ரகசிய குறியீடு எண் (4 இலக்கம்) ஆகியவற்றை தெரிவிக்கும் படி பேசி நூதன பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கரூரை சேர்ந்த வசந்தி என்ற பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பேசுவதாக மர்ம நபர் கூறியதும் அதனை உண்மை என நம்பிய வசந்தி தனது ஏ.டி.எம். கார்டு ரகசிய குறியீடு எண்ணை தெரிவிக்கவே அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. அதே நாளில் பெங்களூருவை சேர்ந்த பசவராஜ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் இதே பாணியில் ஒரு மர்ம நபர் பேசி அவரது வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரம் ரூபாயை நொடிப்பொழுதில் கொள்ளையடித்து இருக்கிறான்.

போலீசில் புகார் கொடுத்து இருப்பதால் பணத்தை இழந்த இந்த 2 நபர்களை பற்றிய விவரங்கள் வெளி உலகிற்கு தெரிய வந்து உள்ளது. ஆனால் வெளி உலகிற்கு தெரியாமல் ஏமாந்தவர்கள் இன்னும் பலர் இருக்கலாம். வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களின் செல்போன் எண்ணிற்கு ஏ.டி.எம் கார்டு எண், ரகசிய குறியீடு எண் கேட்டு அழைப்பு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வங்கிகள் மற்றும் போலீசாரின் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அறிந்தவர்கள் மோசடி பேர்வழிகளிடம் சிக்காமல் தப்பித்து விடுகிறார்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட வங்கியில் இருந்து பேசுகிறோம் என்ற குரலை கேட்டதும் தங்களை அறியாமல் தங்களது கார்டு பற்றிய விவரங்களை ஒப்புவித்து விடுகிறார்கள்.

நூதன மோசடி கும்பலின் பிடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? வங்கியில் உள்ள தங்களது பணத்தை இழக்காமல் இருக்க பின்பற்றவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியன் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் வி. சாமிநாதன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 4 வருவாய் மாவட்டங்கள் உள்ளடக்கிய திருச்சி மண்டலத்தில் இந்தியன் வங்கிக்கு மொத்தம் 56 கிளைகள் உள்ளன. எங்கள் வங்கி கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யாரிடமும் வங்கியில் இருந்து சாதாரண ஊழியரோ, அதிகாரிகளோ வாடிக்கை யாளரின் கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை ஒரு போதும் கேட்டது கிடையாது. கேட்கவும் மாட்டார்கள். இந்த விவரங்கள் தொடர்பாக குறுந்தகவலும் அனுப்புவது கிடையாது. மின்னஞ்சலும் செய்வது கிடையாது. எனவே வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யார் பேசினாலும் வாடிக்கையாளர்கள் அவர்களது குரலில் மயங்கி வங்கி கணக்கு தொடர்பான குறிப்பாக ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீடு எண் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

அவர்கள் கேட்கும் விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிவித்து விட்டால் அடுத்த நிமிடமே கணக்கில் உள்ள அவர்களது பணம் கொள்ளை போய்விடும். இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் சர்வதேச அளவிலான நெட்வொர்க்கில் செயல்படுவதால் அவர்களை டிராக் செய்து பிடிப்பது என்பது கடினமான செயலாக உள்ளது. யாராவது இந்த மோசடி நபர்களிடம் சிக்கி பணத்தை இழந்து இருந்தால் அவர்கள் காவல் துறையில் இதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள ‘சைபர் கிரைம்’ போலீசில் புகார் செய்ய வேண்டும்.

மேலும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திருட்டு செல்போன்களையே பயன்படுத்துகிறார்கள். எனவே பொதுமக்கள் தங்களது செல்போன் திருட்டு போய்விட்டால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும். மேலும் இந்தியன் வங்கியின் எந்த ஒரு கிளையிலும் இதுபற்றிய தகவலை உடனடியாக நேரில் சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும். நேரில் செல்ல முடியாதவர்கள் 1800 4250 0000 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி செய்வதன் மூலம் நமது கணக்கில் உள்ள பணத்தை காப்பாற்றுவதோடு அந்த செல்போனில் இருந்து குற்றவாளி இன்னொருவரிடம் பேசி பணத்தை திருடும் முயற்சிக்கும் தடை போட்டு விடலாம்.

மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள சாதாரண ஏ.டி.எம் கார்டுக்கு பதிலாக ‘இ.எம்.வி. சிப்’ பொருத்தப்பட்ட கார்டுகளை டிசம்பர் 31-ந்தேதிக்குள் மாற்றிக்கொள்ளும்படி ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கி உள்ளது. இது சம்பந்தமாகவும் வங்கியில் இருந்து அதிகாரிகள் யாரும் பேசமாட்டார்கள். எனவே வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கே நேரடியாக சென்று சிப் பொருத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story