வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் கொசுவலையுடன் முற்றுகை


வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் கொசுவலையுடன் முற்றுகை
x
தினத்தந்தி 6 Dec 2018 10:03 PM GMT (Updated: 6 Dec 2018 10:03 PM GMT)

நோய் பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தக் கோரி கொசு வலையுடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் ஊசுடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், குப்பைகள் அள்ளப்பட வேண்டும் என்றும் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டியும் பா.ம.க. சார்பில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை கொசுவலையுடன் முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் புகுந்து தரையில் அமர்ந்து கொசுவலையை தலைக்குமேல் உயர்த்தி பிடித்து கோஷம் எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story