தாதா ரவி புஜாரியின் முன்னாள் கூட்டாளி உள்பட 2 பேர் கைது 4 துப்பாக்கிகள், 29 தோட்டாக்கள் பறிமுதல்

தாதா ரவி புஜாரியின் முன்னாள் கூட்டாளி உள்பட 2 பேர் கைது 4 துப்பாக்கிகள், 29 தோட்டாக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 10:24 PM GMT)

மும்பையில் தாதா ரவி புஜாரியின் முன்னாள் கூட்டாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 29 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மும்பை, 

மும்பையில் தாதா ரவி புஜாரியின் முன்னாள் கூட்டாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 29 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் தாதா ரவி புஜாரி கும்பலை சேர்ந்த முன்னாள் கூட்டாளி ஒருவர், அங்கு வரவுள்ளதாக பாந்திரா குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து ரவி புஜாரியின் முன்னாள் கூட்டாளி சாதிக் இப்ராகிம் பெங்காலி (வயது40) என்பவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில், அவரது கூட்டாளி தவல் தேவரமணி என்பவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

2 பேர் கைது

இவர்களிடம் நடத்திய சோதனையில், 4 துப்பாக்கிகள், 29 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு இந்தி பட தயாரிப்பாளர் மகேஷ் பட்விற்கு கொலை மிரட்டல் விடுத்தல், லோனாவாலாவில் இரட்டை கொலை வழக்கு, சிவசேனா பிரமுகர் தேவிதாஸ் சவுகலே கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில், சாதிக் இப்ராகிம் பெங்காலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தவிர காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர், தாதா ரவிபுஜாரியை கொல்ல முயன்றதாகவும், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ளூர் கும்பல்களுக்கு துப்பாக்கிகளை வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.

Next Story