வேலூரில் கொடிநாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


வேலூரில் கொடிநாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 7 Dec 2018 6:08 PM GMT)

வேலூரில் நடந்த படைவீரர் கொடிநாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர்,

இந்திய நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவையையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி வேலூர் மக்கான் சந்திப்பில் உள்ள சிப்பாய் நினைவுத்தூண் அருகே படைவீரர் கொடிநாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தையும், மேலும் முன்னாள் படைவீரர்களின் குடும்ப நலனுக்காக கொடிநாள் நிதி உண்டியல் வசூலையும் கலெக்டர் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘வேலூர் மாவட்டம் கொடிநாள் வசூலில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தாண்டு கொடிநாள் வசூல் நிதியை 2 மடங்காக வழங்கிட பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதிகளை வழங்கி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனுக்கு உதவிட வேண்டும்’ என்றார்.

ஊர்வலம் மக்கான் சந்திப்பில் தொடங்கி, ஆற்காடு சாலை, லாங்கு பஜார், பில்டர்பெட் சாலை, தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதில், முன்னாள் படைவீரர்கள், நாட்டு நலத்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கடைகளில் கொடிநாள் நிதி வசூல் செய்தனர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் மேஜர் போனி வின்சென்ட், முன்னாள் படைவீரர் நலவாரிய துணைத்தலைவர் கேப்டன் துரைராஜ், கண்காணிப்பாளர்கள் எட்வர்ட்ராஜ், சாந்தமூர்த்தி, முன்னாள் படைவீரர் நல அமைப்பாளர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் முன்னாள் படைவீரர், அக்குடும்பத்தை சார்ந்தோர், போரில் ஊனமுற்ற படைவீரர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இதில் ஏராளமான முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

Next Story