பேராவூரணி அருகே மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
பேராவூரணி அருகே மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேராவூரணி,
கஜா புயலால் பேராவூரணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதியில் கடந்த 23 நாட்களாகியும் முழுமையாக மின்சாரம் வழங்கவில்லை. இந்த நிலையில் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தாளூர் பகுதியில் பேராவூரணி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு மட்டும் மின்சாரம் வழங்கிய நிலையில், சேதுபாவாசத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தர்ஹா பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேராவூரணி– பட்டுக்கோட்டை சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மின்சாரம் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்தாளூர் கிராமத்தில் பாதிபகுதிக்கு மட்டும் மின்வினியோகம் செய்யப்பட்டுள்ளது.எங்கள் தர்ஹா பகுதிக்கு மின்சாரம் வழங்கவில்லை என்று பொதுமக்கள் கூறினர்.
அதற்கு பேராவூரணி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தர்ஹா பகுதிக்கு சேதுபாவாசத்திரம் துணை மின்நிலையத்தில் இருந்து தான் மின்வினியோகம் வழங்கவேண்டும். எனவே இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி பேராவூரணி துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பேராவூரணி–பட்டுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.