ஊழியர்களின் ஊதியம் பிடித்ததை கண்டித்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம்; சி.ஐ.டி.யூ. சங்கம் அறிவிப்பு
ஊழியர்களின் ஊதியம் பிடித்தத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு வருகிற 12–ந்தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யூ. சங்கம் அறிவித்துள்ளது.
திருவாரூர்,
திருவாரூரில் சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் கும்பகோணம், நாகை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் மணிமாறன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர்கள் முருகையன் (திருவாரூர்), மணி (நாகை), மத்திய சங்க துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
கஜா புயலால் திருத்துறைப்பூண்டி, நாகை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய அரசு போக்குவரத்து பணிமனைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் தொடர்பு இல்லாததால் அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு விடுப்பு இருந்தும் விடுப்பு மறுக்கப்பட்டது.
வேலைக்கு வரவில்லை என காரணம் கூறி 300–க்கும் அதிகமான ஊழியர்களிடம் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு வருகிற 12–ந் தேதி (புதன்கிழமை) காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.