தாணிக்கோட்டகம் கடைத்தெருவிற்கு செல்லும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
தாணிக்கோட்டகம் கடைத்தெருவிற்கு செல்லும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகத்தில் சின்னதேவன்காடு உள்ளது. இந்த பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து தாணிக்கோட்டகம் கடைத்தெருவிற்கு செல்லும் சாலையில் போதிய அளவு வடிகால் வசதி இல்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–
சின்னதேவன்காடு பகுதியில் உள்ள மக்கள் ரேஷன்கடை செல்வதற்கும், இந்த பகுதியில் உள்ள மாணவ–மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும் தாணிக்கோட்டகம் கடைத்தெரு சாலையை தான் பயன்படுத்தி வருகிறோம்.
இந்தநிலையில் இந்த சாலையில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயநிலையும் நிலவுகிறது.
ஆதலால் தாணிக்கோட்டகம் கடைத்தெருவிற்கு செல்லும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story