20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:00 PM GMT (Updated: 7 Dec 2018 7:33 PM GMT)

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஈரோடு,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள் பதவியை மீண்டும் தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். கணினி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களுக்கு கழிப்பறை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் ஈரோடு காளைமாடு சிலை அருகில் ஒன்று கூடி உண்ணாவிரதம் இருந்தனர்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் சதீஷ் கமல், துணைத்தலைவர் சதீஷ்குமார், துணைச்செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேற்கு மண்டல செயலாளர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


Next Story