கொடைரோடு அருகே 2 பேர் உயிரிழப்பு: தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரசாயனம் கலந்த மதுபாட்டில்கள் எங்கே? - போலீசார் தேடுதல் வேட்டை
2 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, கொடைரோடு அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரசாயனம் கலந்த மதுபாட்டில்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொடைரோடு,
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 45), பாரதிபுரத்தை சேர்ந்த சமையன் (60), பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த தங்கப்பாண்டி (47) ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளப்பட்டியில் ஒரு பெட்டிக்கடையில் மது வாங்கி குடித்தனர். அடுத்த ஒரு சில நிமிடங்களில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் முருகன், சமையன் ஆகியோர் இறந்தனர். தங்கப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளப்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் சட்டவிரோதமாக மது விற்றுள்ளார். அவருடைய தொழிலை முடக்கும் வகையில், மதுவில் ரசாயன பொடி கலக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராஜலிங்கம் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் மதுபானம் விற்றது தொடர்பாக ஜெயச்சந்திரன் உள்பட 4 பேர் கைதாகினர். மேலும் ரசாயன பொடி கலந்த 12 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேநேரத்தில் அங்குள்ள ஒரு தோட்டத்தில் ரசாயனம் கலந்த 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. எனினும், போலீசார் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள் சிக்கவில்லை.
தொடர்ந்து போலீசார் அந்த மதுப்பாட்டில்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே ரசாயனம் கலந்த மது கிடைத்து யாராவது குடித்து விட்டால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார்.
இதையடுத்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நிலக்கோட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பேபி, நிலஅபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபக்குமார் மற்றும் போலீசார் கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பள்ளப்பட்டி, முருகத்தூரான்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, கவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தெரு தெருவாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது கீழே கிடக்கும் மதுபாட்டில்களை எடுத்து குடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் கீழே கிடந்தால் போலீஸ் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்துக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபாட்டில்களை ஒப்படைக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
Related Tags :
Next Story