மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்


மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:00 PM GMT (Updated: 7 Dec 2018 9:49 PM GMT)

மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகமாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் (ஜனவரி) அறுவடைசெய்கிற சூழ்நிலையில் மக்காச்சோளம் வளர்ந்துள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக மக்காச்சோள பயிரில் படை புழு தாக்கி வருகிறது. இதனால் மக்காச்சோளத்தின் விளைச்சல் ஒட்டு மொத்தமாக பாதிக்கும் அபாயத்தில் உள்ளது. மேலும் அழுகல் நோயால் சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் கரும்பு, பருத்தி ஆகிய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

எனவே படை புழு தாக்கிய மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலெக்டரிடம் மனுகொடுப்பதற்காக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி நேற்று காலை திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில விவசாயிகள் படைபுழு தாக்கிய மக்காச்சோள பயிருகளை கையோடு எடுத்து வந்திருந்தனர். படைபுழு தாக்கிய மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரியும், அழுகல் நோய் தாக்கிய சின்ன வெங்காயம், வறட்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.

விவசாயிகளின் மனு கொடுக்கும் போராட்டம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சந்தானகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள், விவசாயிகளிடம் இருந்து மனுக்களை வாங்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் சந்தானகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினர். விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள், படைபுழு தாக்கிய மக்காச்சோள பயிருக்கு அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story