வேலைவாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி: சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து ஏமாற்றிய கேரள வாலிபர் கைது


வேலைவாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி: சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து ஏமாற்றிய கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2018 4:00 AM IST (Updated: 8 Dec 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததுடன் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து ஏமாற்றிய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போத்தனூர்,


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருப்பலூரை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 32). இவர் வேலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு, கணவரை விட்டு பிரிந்து 3 குழந்தைகளுடன் வசித்து வந்த 26 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

அந்த பெண்ணிடம் தான் சி.பி.ஐ. அதிகாரி என்று கிரீஷ் கூறியதுடன், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று கூறி உள்ளார். உடனே அந்த பெண் தனது 3 குழந்தைகளையும் பெற்றோரிடம் விட்டுவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரீசுடன் கோவை வந்தார். அவர்கள் 2 பேரும் கோவையை அடுத்த பி.கே.புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே செல்லும் கிரீஷ் சரியாக வீட்டிற்கு வருவது கிடையாது. அத்துடன் அவருடைய நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அவரை அந்த பெண் ரகசியமாக கண்காணித்து வந்தார். அதில் கிரீசுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தார். அத்துடன் அவர் சி.பி.ஐ. அதிகாரியா என்றும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த கிரீசிடம் நீங்கள் சி.பி.ஐ. அதிகாரியா என்று அந்த பெண் கேட்டார். அதற்கு அவர் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடித்து உதைத்துள்ளார். இது குறித்து அந்த பெண், குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரீசை கைது செய்தனர்

விசாரணையில், அவர் சி.பி.ஐ. அதிகாரி இல்லை என்பதும், சி.பி.ஐ. அதிகாரி போன்று போலி அடையாள அட்டை தயார் செய்து, அதை வைத்து பலரிடம் வேலைவாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘கிரீஷ் வைத்திருந்த சி.பி.ஐ. அதிகாரிக்கான அடையாள அட்டையில் அவருடைய பெயர் ராஜகிரி என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் சி.பி.ஐ. அதிகாரி போன்று நடித்து பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்து உள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர். 

Next Story