பஸ் நிறுத்தத்தில் இறந்த கணவர் உடல் புதைப்பு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் மனு


பஸ் நிறுத்தத்தில் இறந்த கணவர் உடல் புதைப்பு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் மனு
x
தினத்தந்தி 8 Dec 2018 4:20 AM IST (Updated: 8 Dec 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிறுத்தத்தில் இறந்த கணவரின் உடல் புதைக்கப்பட்ட சம்பவத்தில், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் கீளூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சுபா (வயது 38). இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் செல்வராஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் ஏற்படும் மன உளைச்சலினால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறி நடந்தே பல இடங்களுக்கும் சென்று வருவார். அவர் வர தவறினால் நாங்கள் தேடிச்சென்று அழைத்து வருவோம். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுசீந்திரம் அருகே நல்லூருக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சுசீந்திரம் போலீசார் எனது கணவர் உடலை கைப்பற்றி, சட்டத்துக்கு உட்பட்டு வழக்கு பதிவு செய்யாமலும், பிரேத விசாரணை செய்யாமலும், பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமலும் சட்டவிரோதமாக புதைத்து உள்ளனர்.

எனது கணவரை தேடி நல்லூர் சென்றபோது மேற்கண்ட சம்பவங்களை தெரிந்து கொண்டேன். சுசீந்திரம் போலீசாரை அணுகி கேட்டபோது போலீசாரும் ஒப்புக்கொண்டனர். இதனால் எனது கணவரின் இறப்புச்சான்று பெற முடியவில்லை. எனவே எனது கணவர் மர்ம மரணம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்யவும், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டு தவறிழைத்த போலீசார் மீதும், சட்டவிரோத செயலுக்கு துணைபுரிந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story