திருக்காட்டுப்பள்ளி அருகே: கட்டிட பொறியாளரை கடத்தி ரூ.37 ஆயிரம் பறிப்பு - 4 பேருக்கு வலைவீச்சு


திருக்காட்டுப்பள்ளி அருகே: கட்டிட பொறியாளரை கடத்தி ரூ.37 ஆயிரம் பறிப்பு - 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 8 Dec 2018 12:03 AM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே கட்டிட பொறியாளரை கடத்தி ரூ.37 ஆயிரத்தை பறித்து சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி, 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வடக்கு வாடி தெருவை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 48). கட்டிட பொறியாளர். சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான மினி வேனில் திருச்சிக்கு சென்று கட்டுமான பணிக்கு தேவையான கற்களை வாங்கி கொண்டு வந்தார். கல்லணை அருகே கச்சமங்கலம் பிரிவு சாலை பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார், வேனை வழிமறித்தது.

அதில் இருந்து முகமூடி அணிந்த 4 பேர் அரிவாள்களுடன் இறங்கி வந்து கந்தவேலை தாக்கி, தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வேன் டிரைவர் வெங்கடேசன் மற்றும் வேனில் இருந்த தர்மராஜன் ஆகியோர் கந்தவேலின் மனைவிக்கும், போலீசுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே கந்தவேலை கடத்தி சென்றவர்கள் அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கந்தவேல் கூறியதும் தொகையை படிப்படியாக குறைத்து ரூ.3 லட்சம் வரை இறங்கி வந்தனர். அதுவும் இல்லை என்றவுடன், கந்தவேலிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை பிடுங்கிக்கொண்ட 4 பேரும், அதன் மூலமாக ரூ.37 ஆயிரத்தை கந்தவேலிடம் இருந்து பறித்துக் கொண்டனர். முன்னதாக பணம் கொடுக்காவிட்டால் ஒரு பெண்ணை நிர்வாணமாக அருகில் நிற்க வைத்து வீடியோ எடுத்து “முகநூலில்” பதிவேற்றம் செய்து விடுவோம் என 4 பேரும் மிரட்டி உள்ளனர். மேலும் கந்தவேல் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தையும் 4 பேரும் பறித்து விட்டு அவரை திருச்சி அருகே உள்ள துவாக்குடி பகுதியில் விட்டு சென்றனர்.

இதுதொடர்பாக கந்தவேல் தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குலசேகரன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் கந்தவேலை கடத்தி ரூ.37 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் மோதிரத்தை பறித்த 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story