வாக்காளர் பட்டியலில் இருந்து 48 ஆயிரம் பேர் நீக்கம் பார்வையாளர் பேட்டி


வாக்காளர் பட்டியலில் இருந்து 48 ஆயிரம் பேர் நீக்கம் பார்வையாளர் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 4:55 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 48 ஆயிரம் பேர் நீக்கப்பட உள்ளது என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சந்தோஷ் மிஸ்ரா கூறினார்.

வாலாஜா, 

வாலாஜா தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் குறித்து நடைபெற்ற முகாமின் ஆவணங்களை தமிழ்நாடு தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சந்தோஷ் மிஸ்ரா ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது ஒரே வாக்காளர்களின் பெயர்கள் இருமுறை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பட்டியல் ‘டூப்ளிகேசன்’ என்ற மென்பொருளின் உதவியோடு தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 2 பெயர்கள் உள்ள வாக்காளர்களுக்கு அறிவிப்பாணை அனுப்பப்படுவதோடு விசாரணை செய்யப்பட்டு பின்னர் அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.


இதேபோல் குடியிருப்பை விட்டு வேறு இடம் மாறி சென்றவர்களின் பெயர்களும், இறந்தவர்களின் பெயர்களும் வீடு, வீடாக சென்று சேகரிக்கப்படும். இதனை வாக்காளர்களின் தகவல்களோடு ஒப்பிட்டு அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். தற்போது வேலூர் மாவட்டம் முழுவதிலும் வாக்காளர் பட்டியலில் இருந்து 48 ஆயிரம் பேர் நீக்கம் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சந்தோஷ் மிஸ்ரா, வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோர் வீடு, வீடாக சென்று திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது வாக்காளர் பட்டியலில் இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனரா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வேணுசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story