பேராவூரணியை சேர்ந்த ஆசிரியர் காரில் கடத்தல் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் சிக்கினார்


பேராவூரணியை சேர்ந்த ஆசிரியர் காரில் கடத்தல் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 9 Dec 2018 4:30 AM IST (Updated: 8 Dec 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

கஜா புயலுக்கு நிவாரண நிதி வசூலிப்பதாக கூறி பேராவூரணியை சேர்ந்த ஆசிரியரை காரில் கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். தந்தை–மகனை போலீசார் மீட்டனர்.

தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். நெல் வியாபாரி. இவருடைய மகன் மணிகண்டன்(வயது 29). இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக வாழப்பாடி அய்யாகவுண்டர் தெருவில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் இவர் வழக்கம்போல் தான் பணியாற்றி வரும் பள்ளிக்கூடத்திற்கு சென்றார். அப்போது அவரை சந்திக்க 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள், மணிகண்டனை சந்தித்து பேசியதுடன் அவரை அழைத்துக் கொண்டு ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர். அவர் காருக்குள் ஏறி அமர்ந்ததும் அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் காரில் இருந்தவர்கள், ஊமத்தநாடு கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டனின் தந்தை ராஜேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.


அப்போது அவர்கள், உங்களது மகனை நாங்கள் கடத்தி விட்டோம். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் நடப்பதே வேறு என்றும் மிரட்டினர்.

இதனால் பயந்துபோன அவர், பணத்தை தருவதாக ஒப்புக் கொண்டார். எந்த இடத்திற்கு பணத்தை கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டபோது, நாங்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டு வந்தால் போதும். எங்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை பின்னர் கூறுவோம் என்று தெரிவித்து விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.


இந்த நிலையில் சேலத்தில் இருந்து புறப்பட்டு வந்த கார் தஞ்சை வந்தது. தஞ்சை கீழவஸ்தாசாவடி வழியாக பட்டுக்கோட்டை பகுதிக்கு சென்ற அவர்கள், காரிலேயே அந்த பகுதியை சுற்றி, சுற்றி வந்தனர்.

நீண்ட நேரமாக தனது மகனை கடத்தியவர்களிடம் இருந்து தகவல் ஏதும் வராததால் பதறிப்போன ராஜேந்திரன், மீண்டும் அந்த கடத்தல் கும்பலை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள், பட்டுக்கோட்டை அருகே உள்ள கறம்பயத்திற்கு பணத்துடன் வரும்படி கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.


அதன்படி ராஜேந்திரன் கறம்பயத்திற்கு பஸ்சில் புறப்பட்டு சென்றார். அங்கு பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் மீண்டும் அந்த கும்பலிடம் தொடர்பு கொண்டு எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த கும்பலை சேர்ந்தவர்கள், நீங்கள் இங்கு வர வேண்டாம். நாங்கள் வருகிறோம் என்று கூறி விட்டு கறம்பயம் பஸ் நிறுத்தத்திற்கு சென்றனர்.

பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றனர். அப்போது ராஜேந்திரனிடம் ரூ.10 லட்சம் கொண்டு வந்து உள்ளாயா? என்று கேட்டு உள்ளனர். அதற்கு அவர், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. என்னிடம் கையில் இருந்ததை கொண்டு வந்துள்ளேன் என்று கூறி தான் கொண்டு வந்த ரூ.2 லட்சத்தை அவர்களிடம் கொடுத்து உள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள், நாங்கள் கேட்ட பணத்தை ஏன் கொண்டு வரவில்லை? எனக்கேட்டு அவரை தாக்கியுள்ளனர். மேலும் மணிகண்டன் அணிந்து இருந்த மோதிரங்களையும், 3 பவுன் சங்கிலியையும் பறித்துக்கொண்டனர்.


பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அனைவரும் காரில் அமர்ந்து இருந்தனர். இரவு நேரத்தில் ஒரு கார் திடீரென வந்து நிற்பதை பார்த்த கிராம மக்கள் சிலர், காரின் அருகே சென்றனர். அப்போது காரில் இருந்த தந்தை–மகன் இருவரும் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர்.

அவர்கள் சத்தம் போட்டவுடன் காருக்குள் இருந்த 5 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி செல்ல முயன்றனர். அவர்களை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தாக்கினர். அப்போது அவர்களது பிடியில் இருந்து நழுவி 5 பேரும் காட்டுப்பகுதிக்குள் ஓடி தலைமறைவாகி விட்டனர்.


இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அவர், இரவு பணியில் இருந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக கறம்பயத்துக்கு புறப்பட்டு செல்லும்படி கூறினார். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ஏட்டுகள் சாந்தகுமார், இளவரசன், சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு காரில் இருந்த ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோரை மீட்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:–


கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சேலம் பகுதியில் சிலர், கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவ தங்களால் முயன்ற உதவிகளை செய்யும்படி வாட்ஸ்–அப் மூலம் குறுந்தகவல் அனுப்பினர். அந்த தகவல் மணிகண்டன் செல்போனுக்கும் வந்துள்ளது. இதை உண்மை என நம்பிய அவர், தன்னால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பதில் அனுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு சென்ற மணிகண்டனை அந்த 5 பேரும் சந்தித்து பேசியதுடன், கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவி செய்ய நீங்களும் வர வேண்டும் என்று அழைத்துள்ளனர். இதை உண்மை என நம்பிய அவர், அந்த வாலிபர்களுடன் காரில் ஏறி சென்றுள்ளார். அதன்பின்னர் தான் தன்னை அந்த கும்பல் பணத்துக்காக கடத்தி சென்ற தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மீட்கப்பட்ட தந்தை–மகன் இருவரையும் பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரில் இருந்த ரூ.2 லட்சம், 3 மோதிரங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து தஞ்சையை நோக்கி வந்தனர்.


கறம்பயத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தாண்டி அவர்கள் வந்தபோது, சாலையோரம் புதருக்குள் இருந்து வாலிபர் ஒருவர் வந்தார். உடனே போலீசார் ஜீப்பை நிறுத்தி, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் வீரா என்பதும், மணிகண்டனை கடத்தி வந்த 5 பேரில் அவரும் ஒருவர் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை பிடித்துக்கொண்டு தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் இந்த தகவல் வாழப்பாடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படையினர் தஞ்சைக்கு வந்தனர். அவர்களிடம் வீராவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், காரில் இருந்த பணம், 3 மோதிரங்களையும் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த கடத்தலுக்கு பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு மற்றும் பாபநாசத்தை சேர்ந்த இருவர்தான் முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளனர். தலைமறைவாகி விட்ட அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.10 லட்சம் பணம் கேட்டு ஆசிரியரை காரில் கடத்திய சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story