புதிதாக திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


புதிதாக திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்  பரபரப்பு
x
தினத்தந்தி 9 Dec 2018 4:15 AM IST (Updated: 8 Dec 2018 10:52 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு, 

செய்யாறு பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் டாஸ்மாக் இயங்கி வந்தது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதாக வந்த புகாரின் பேரில், கலெக்டர் கந்தசாமி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தபோது அப்பகுதி பெண்கள் திரண்டு டாஸ்மாக் கடையினால் பெரிதும் அச்சமாக உள்ளதால் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கிருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.

இந்த நிலையில் அதே பகுதியில் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையாக விளங்கும் காந்தி சாலையில் அதே கடை எண்ணில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து, ஏற்கனவே அகற்றிய கடையினை மீண்டும் திறப்பதா? என்றும், கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனுவினை அளித்துள்ள நிலையில் ஏன் இப்பகுதியில் கடையை திறந்தீர்கள்? என கடையின் முன்பு சிலர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் கடையினுள் நுழைந்து மதுபாட்டில்களை எடுக்க முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.ஜனார்த்தனன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும் கடைக்கு உள்ளே சென்றவர்களை வெளியே இழுத்து வந்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடையை திறக்க போலீசார் பாதுகாப்பு அளிப்பதா? என வாக்குவாதம் செய்தனர். கடையின் முன்பு சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கடையின் ஷட்டரை இழுத்து மூட முயன்றனர்.

மின்மோட்டாரில் இயங்கும் ஷட்டர் என்பதால் பொதுமக்கள் மூட முடியாமல் கடையின் மேற்பார்வையாளர் பாலு மற்றும் விற்பனையாளர்களிடம் ஷட்டரை மூட கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழ்நிலையில் கடையின் மேற்பார்வையாளர் பாலு மின்மோட்டார் பட்டனை அழுத்தி கடையின் ஷட்டரை மூடினார்.

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story