கப்பல் தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.3½ கோடி மோசடி செய்தவர் கைது


கப்பல் தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.3½ கோடி மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2018 11:15 PM GMT (Updated: 8 Dec 2018 5:57 PM GMT)

கப்பல் தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.3½ கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையை சேர்ந்தவர் ஷேக்பரீத் மனைவி ரஹமத்ஜான் (வயது 63). இவருக்கு எலவனாசூர்கோட்டையில் சேலம் மெயின்ரோட்டில் வீட்டுமனையுடன் கூடிய 4,822½ சதுர அடி இடம் இருந்தது. ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள இந்த இடத்தை ரஹமத்ஜான் விற்க முடிவு செய்தார்.

இதையறிந்த உளுந்தூர்பேட்டை காயிதே மில்லத் தெருவை சேர்ந்த தவுலத்கான் மகன் ஜஹாங்கீர் என்கிற கப்பல்பாய் (44) என்பவர் ரஹமத்ஜானை அணுகி, இந்த இடத்தை தான் விற்றுத்தருவதாக கூறினார். மேலும் தான் சவுதி அரேபியாவில் பழைய கப்பல்களை வாங்கி, அதனை சீரமைத்து விற்கும் தொழில் செய்வதாகவும், அதில் உங்களையும் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாகவும் ரஹமத்ஜானிடம் ஜஹாங்கீர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இவர் தன்னுடைய தம்பியின் நண்பர் என்பதால் ஜஹாங்கீர் கூறியதை ரஹமத்ஜான் நம்பினார்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் ரஹமத்ஜானிடம் ஜஹாங்கீர் ரூ.10 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு அந்த இடத்தை வாங்கினார். ஆனால் மீதமுள்ள ரூ.3½ கோடியை ரஹமத்ஜானுக்கு ஜஹாங்கீர் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். பலமுறை ஜஹாங்கீரிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை முழுமையாக தரும்படியும், இல்லையெனில் தன்னுடைய இடத்தை தரும்படியும் ரஹமத்ஜான் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்ததோடு ரஹமத்ஜானுக்கு ஜஹாங்கீர் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரஹமத்ஜான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜஹாங்கீர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் ஜஹாங்கீரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாத்துரை, நேவிஸ் அந்தோணிரோஸி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டையில் இருந்து ஜஹாங்கீர் வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ஜஹாங்கீரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், அவர் எவ்வித கப்பல் தொழிலும் செய்யவில்லை என்பதும், கப்பல் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஜஹாங்கீரை போலீசார் கைது செய்து உளுந்தூர்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story