விழுப்புரம் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதல்; தொழிலாளி சாவு 7 பேர் காயம்


விழுப்புரம் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதல்; தொழிலாளி சாவு 7 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 6:01 PM GMT)

விழுப்புரம் அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி பலியானார். இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம், 

திருக்கோவிலூர் அருகே டி.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 26). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலையில் இருந்த போது, நவீனின் காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்த பின்னர் சொந்த ஊரில் உள்ள வீட்டில் விடுவதற்காக நவீனை சக தொழிலாளர்கள் ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அத்திப்பாக்கத்திற்கு புறப்பட்டனர். சரக்கு வாகனத்தை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் (40) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இந்த சரக்கு வாகனம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் விழுப்புரத்தை அடுத்த கருங்காலிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக சாலையோரமாக இருந்த புளியமரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் டிரைவர் ஆறுமுகம் மற்றும் நவீன், தண்டையார்பேட்டை வினோபாநகரை சேர்ந்த துரைராஜ் (50), திருவள்ளூர் மாவட்டம் கொடியூரை சேர்ந்த கார்த்திக் (24), சென்னை நேதாஜி நகர் பாலசுப்பிரமணியன் (47), கொருக்குப்பேட்டை சரவணன் (36), சென்னை அண்ணாநகர் ரமேஷ் (42), தண்டையார்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த சரவணன் (38) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு துரைராஜை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 7 பேரும் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story