நேரு பூங்காவில் மழையால் அழுகிய மலர்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


நேரு பூங்காவில் மழையால் அழுகிய மலர்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 9 Dec 2018 3:15 AM IST (Updated: 9 Dec 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி நேரு பூங்காவில் மழையால் மலர்கள் அழுகின. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி–மேட்டுப்பாளையம் சாலையில் காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள நேரு பூங்கா. இது கோத்தகிரி பேரூராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா 65 சென்ட் பரப்பளவில் பல்வேறு மலர்களின் தோட்டம், ரோஜா தோட்டம், புல்வெளிகள் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் பூங்கா வளாகத்தில் கோத்தர் இன மக்களின் பழமை வாய்ந்த அய்யனோர் அம்மனோர் கோவில் உள்ளது. இதனை ஒட்டி புகழ்பெற்ற காந்தி விளையாட்டு மைதானமும் இருக்கிறது. கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க ஆண்டுதோறும் 2 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் இடம்பெறும் காய்கறியால் உருவான சிற்பங்களை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் கோத்தகிரிக்கு வந்து, செல்வார்கள்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரியில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நேரு பூங்காவில் உள்ள செடிகளில் ரோஜா, சூரியகாந்தி உள்ளிட்ட மலர்கள் அழுகி உள்ளன. இதனால் விடுமுறை நாளான நேற்று பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மலர்கள் அழுகி இருப்பதை கண்டு கவலை அடைந்தனர். இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, கோடைக்கால சீசனுக்காக பூங்காவில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக பூங்காவில் உள்ள புல்வெளிகள் எந்திரம் மூலம் வெட்டி சமன்படுத்தப்படும். அதன்பின்னர் மலர்கள் அழுகிய செடிகள் பிடுங்கப்பட்டு, புதிய நாற்றுகள் நடப்படும். அதன்பிறகு வழக்கம்போல் பூங்காவில் அழகிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். என்றனர்.


Next Story