குழந்தைக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் திடீர் முற்றுகை


குழந்தைக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 9 Dec 2018 4:00 AM IST (Updated: 9 Dec 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் குழந்தைக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு உள்ளதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு ரோடு எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் குணசந்திரன். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு அஜய் (வயது 8), அகிலன் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6–ந் தேதி அகிலன் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பள்ளிக்கூட வேன் எதிர்பாராதவிதமாக அகிலன் மீது மோதியது. இந்த விபத்தில் அகிலன் படுகாயம் அடைந்தான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்தநிலையில் நேற்று அகிலனின் உடல்நிலை மோசமானதாக தெரிகிறது. இதனால் அகிலனை டாக்டர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தனர். அதற்கு உறவினர்கள் ஆட்சேபனை தெரிவித்து திடீரென ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் அகிலனை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே, ஆபத்தான கட்டத்தில் இருந்தால் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தோம். ஆனால் டாக்டர்கள் அனுப்ப மறுத்துவிட்டனர். இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) கோவைக்கு அனுப்பி வைக்க திடீரென பரிந்துரை செய்தனர். மேலும், கடந்த 2 நாட்களில் ரூ.1½ லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை’’, என்றனர். அதன்பின்னர் உறவினர்களிடம் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, அகிலன் ஆம்புலன்ஸ் மூலமாக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story