கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,405 வழக்குகளில் ரூ.7.17 கோடி மதிப்பில் தீர்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,405 வழக்குகளில் ரூ.7.17 கோடி மதிப்பில் தீர்வு
x
தினத்தந்தி 9 Dec 2018 4:30 AM IST (Updated: 9 Dec 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,405 வழக்குகளில் ரூ.7.17 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.கலாவதி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி ஜே.எம்.2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு என்.எஸ்.ஜெயப்பிரகாஷ் வரவேற்று பேசினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.தஸ்னீம், கடந்த ஒரு ஆண்டில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி கே.அறிவொளி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வினிட் கோதாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்ட வழக்குகளுக்கு காசோலைகளை அவர் வழங்கி பேசியதாவது:-

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தும் இந்த மக்கள் நீதிமன்றம் வாயிலாக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. இதில் வழக்கு நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிகள், தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள சில பரஸ்பரம் பேசி முடித்துக்கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தீர்வு காணப்படுகிறது.

மொழியால், இனத்தால் நாம் வேறுபட்டு இருந்தாலும் ஒரே தேசம், இந்தியர் என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். கல்வி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாக உள்ளது. கல்வி வளர்ச்சி இருந்தாலே பல்வேறு பிரச்சினைகள் அங்கு களையப்படுகிறது. நமது நாட்டில் சிறந்த அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இருக்க கூடாது.

சேவை மனப்பான்மையுடன் கடினமான உழைப்பே மனநிறைவை தரும். நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதில் வழக்கு நடத்துபவர்களுக்கும், வக்கீல்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதில் மக்கள் நீதிமன்றம் வாயிலாக நிலுவையில் உள்ள பல வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு தீர்வு காணப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்தப்படும் இந்த மக்கள் நீதிமன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, கிருஷ்ணகிரி ஜே.எம்.1 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சுல்தான் அர்பீம், சார்பு நீதிபதிகள் மோனிகா, லீலா, கிருஷ்ணகிரி மாவட்ட வக்கீல் சங்க தலைவர் அசோக் ஆனந்த் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரசம் மூலமாக இணைந்த கணவன்-மனைவி வந்திருந்தனர். அவர்களை ஐகோர்ட்டு நீதிபதி வினிட் கோதாரி வாழ்த்தி, கணவன்-மனைவி இருவரும் சமரசம் செய்து வைத்து தனது முன்பு மாலை மாற்றிக் கொள்ள கூறினார். மேலும் அவர்களை வாழ்த்திய நீதிபதி, இருவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

இந்த முகாமில், வங்கிகள் தொடர்பான வழக்குகள், சிறு குற்றங்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகள், சிவில் தொடர்பான வழக்குகள் என மொத்தம் 9 ஆயிரத்து 26 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 1,405 வழக்குகளில் ரூ.7 கோடியே 17 லட்சத்து 9 ஆயிரத்து 122 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

Next Story