புதிய மணல் குவாரி பிரச்சினை: அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


புதிய மணல் குவாரி பிரச்சினை: அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 8:53 PM GMT)

புதிய மணல் குவாரி அமைக்கும் பிரச்சினை குறித்து அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

கரூர்,

கரூர் மாவட்ட அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தென்னரசு வரவேற்று பேசினார்.

சாமானிய மக்கள் நலக்கட்சி பொது செயலாளர் குணசேகரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தனபால், திராவிடர் கழக நிர்வாகி அன்பு உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அமராவதி ஆற்றில் மணல் எடுக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பபெற வேண்டும். இது தொடர்பான பிரச்சினை குறித்து அனைத்து அமைப்புகளை திரட்டி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பது, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், கோயம்பள்ளி, புலியூர், பஞ்சமாதேவி, பள்ளபாளையம், போன்ற பகுதிகளில் அமையவுள்ள புதிய மணல் குவாரியினால் ஏற்படும் பிரச்சினை குறித்து பொதுமக்களிடையே துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பின்னர் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Next Story