மேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி: கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


மேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி: கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2018 4:15 AM IST (Updated: 9 Dec 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணைகட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைக்கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் முன்னாள் தலைவரும் கூட்டமைப்பு தலைவருமான பொன்.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைபொதுச்செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் அழகேசன், பொதுச்செயலாளர்கள் செல்வம், ஆறுமுகம், துணைத்தலைவர் நடராஜன், அமைப்பு செயலாளர்கள் கிருஷ்ணன், துரைமதிவாணன், கொள்கைபரப்பு செயலாளர் தங்கமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

சுப்ரீம்கோர்ட்டு நெறிமுறைப்படி காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது. சென்னை மற்றும் மைசூர் மாகாணங்களிடையே போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகஅரசு எந்த புதிய அணையையும் கட்டக் கூடாது. காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் செயலை மத்திய அரசு உடனடியாக கண்டித்து மேகதாதுவில் புதிய அணைகட்ட வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கட்டுமானதொழிலாளர் நலவாரிய முன்னாள் தலைவர் பொன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து பறித்து வருகிறது. கர்நாடகாவில் தேர்தல் ஆதாயத்திற்காக காவிரி ஆறு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொருட்படுத்தாமல் கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேகதாதுஅணை கட்டப்பட்டால் தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு குடிநீர் கூட கிடைக்காது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. தமிழக அரசு தொடர் போராட்டங்களை அறிவிக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி மேகதாது அணைகட்ட கர்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story