யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 2:37 PM GMT)

யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

பூதப்பாண்டி,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே இறச்சகுளத்தில் தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மேகதாது விவகாரத்தில் கர்நாடக மந்திரி சிவக்குமார், அவர்களது நன்மைக்காக அணைகட்டுவோம் என்கிறார். தமிழர்கள் நலன் பாதிக்கும் வகையில் மேகதாது மட்டுமல்ல எந்த இடத்தில் அணை கட்டினாலும் நாங்கள் எதிர்ப்போம். யார் எதிர்த்தாலும், எதிர்க்காவிட்டாலும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகம் ஏற்றுக்கொண்டால் தான் காவிரியின் குறுக்கே அணைகட்டமுடியும் என்ற விதி உள்ளது.

தமிழர்கள் நலனுக்கு எதிராக கர்நாடகம் செயல்படக்கூடாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறியுள்ளனர். கண்டிப்பாக தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும்.

கஜா புயல் நிவாரணம் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு முதற்கட்டமாக நிதி அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பித்த பிறகு நிதி வழங்குவார்கள். கஜா புயலால் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளோம். நிச்சயமாக மத்திய அரசு போதிய நிதி அளிக்கும்.

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் தி.மு.க.வை எதிர்கொள்ளமுடியும் என்று தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ள கருத்து அவரது சொந்த கருத்து. யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு. ஆனால், பிரிந்து சென்றவர்கள் இணைந்தால் வரவேற்போம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

முன்னதாக இறச்சகுளத்தில் நடந்த தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். லதா ராமச்சந்திரன், பாக்கிய லட்சுமி, பொன். சுந்தர்நாத், ஞாலம் ஜெகதீஷ், சங்கர், முத்துகுமார், நீலகண்ட ஜெகதீஷ், ஆண்டார் பிள்ளை, ராமச்சந்திரன், ரமணி, ரோகிணி, தென்கரை மகாராஜன், பொன்னி கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ரகுமான், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் அய்யப்பன் வரவேற்று பேசினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது கூறியதாவது:–

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தார். அவர் வழியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தமிழக மக்களுக்காக நல்லாட்சி நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் பயன்பெற பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.  குமரி மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறுபான்மை பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் ராஜன், பொருளாளர் திலக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தினை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், ஷாநவாஸ், சுந்தரம், பூங்கா கண்ணன், ராஜாராம், ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், அசோக்குமார், நகர செயலாளர் சந்துரு, பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ், நிர்வாகிகள் ரெயிலடி மாதவன், கார்மல் நகர் தனிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் இறச்சகுளம் ஊராட்சி செயலாளர் மகாராஜ பிள்ளை நன்றி கூறினார்.

Next Story