கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொன்ற வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது
கலசபாக்கம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை அடித்து கொலை செய்து உடலை நிர்வாணமாக்கி கிணற்றில் வீசி சென்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கலசபாக்கம்,
கலசபாக்கம் அருகே வேடந்தவாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வயல்வெளி வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த விவசாய கிணற்றில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை வெளியே எடுத்தனர். அந்த வாலிபர் நிர்வாண நிலையில் தலையின் பின்புறம், கால் பகுதியில் வெட்டுக்காயம் இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இறந்தவர் வேடந்தவாடி வி.பி.குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 28), விவசாயி என்பது தெரிய வந்தது.
மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கார்த்திகேயனுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி அஞ்சலை (35). இவர்களுக்கு திருமணமாகி சதீஷ் (19) என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் இறந்து விட்டார். அஞ்சலை மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஞ்சலைக்கு கார்த்திகேயன் சில உதவிகள் செய்து வந்துள்ளார். பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இது பற்றிய தகவல் அஞ்சலையின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அஞ்சலையின் உறவினர் ஏழுமலை என்ற பச்சையப்பன் அஞ்சலையிடம் கள்ளக்காதலை கண்டித்துள்ளார். இதையடுத்து அஞ்சலை கார்த்திகேயனுடைய தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் கார்த்திகேயன் அஞ்சலைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து கார்த்திகேயனை கொலை செய்ய அஞ்சலை மற்றும் அவரது உறவினர்கள் சதித்திட்டம் தீட்டினர். பின்னர் அஞ்சலை, கார்த்திகேயனை உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்து உள்ளார். கார்த்திகேயன் அஞ்சலையை பார்க்க இரவு செல்லும்போது செல்வம் என்பவரது விவசாய நிலத்தின் அருகே வந்தபோது மறைந்திருந்த ஏழுமலை, அவரது மகன் பூவரசன், அஞ்சலை, அவரது மகன் சதீஷ் ஆகியோர் 4 பேரும் சேர்ந்து கார்த்திகேயனை தாக்க முயன்றபோது கார்த்திகேயன் தப்பி ஓடினார்.
அவர்கள் துரத்தி சென்று கார்த்திகேயன் கால் மற்றும் தலையில் வெட்டி கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அஞ்சலை, ஏழுமலை, பூவரசன், சதீஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.