திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 48 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 48 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 10 Dec 2018 4:15 AM IST (Updated: 10 Dec 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 48 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி,

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவிலில் கடைசியாக கடந்த 2000-வது ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகமாகும். ஆனால் 12 ஆண்டுகளை தாண்டியும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்ததால் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடந்து வந்தன.

திருப்பணி வேலைகள் முடிவடைந்து பரிவார மூர்த்தி சன்னதிகளில் டிசம்பர் 9-ந்தேதியும், மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் டிசம்பர் 12-ந்தேதியும் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் படி முதல் கட்ட கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை 6 மணியில் இருந்தே கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகள், ஹோமம் நடந்தது.

இந்த பூஜையில் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் திருவிடை மருதூர் கட்டளை சாமிநாத தம்பிரான் சுவாமிகள், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து காலை 7 மணி அளவில் யாக சாலையில் இருந்து அர்ச்சகர்கள் புனித நீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்து பரிவார மூர்த்தி சன்னதிகளை நோக்கி சென்றனர். அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை அகிலா முன்செல்ல சங்கராச்சாரியார், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் மேளதாளம் உள்ளிட்ட பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். ராஜகோபுரம் விநாயகர் சன்னதி அருகில் முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அர்ச்சகர்கள் ஆதி அகிலாண்டேஸ்வரி, ஆதி ஜம்புகேஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மீனாட்சி, சுந்தரேஸ்வரர், சங்கமேஸ்வரர், சங்கமேஸ்வரி, குபேரலிங்கம், பிரசன்ன விநாயகர், ஆஞ்சநேயர், பள்ளியறை, நந்தி உள்ளிட்ட 48 சன்னதி விமானங்களுக்கும் அர்ச்சகர்கள் புனித நீர் குடங்கள், மலர் தட்டுகள் எடுத்து சென்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தனர். சரியாக 7.55 மணிக்கு சங்கு ஊதப்பட்டது. சங்கொலி எழுப்பப்பட்டதும் அர்ச்சகர்கள் 48 சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றினார்கள். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் பக்தி பரவசத்துடன் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தான சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், சுந்தரபாண்டியன் கோபுரம் உள்பட 7 கோபுர விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை மண்டபம் சுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு முதல் கால யாகசாலை பூஜை நேற்று மாலை தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30க்கு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கும், 7 மணிக்கு மூலஸ்தான சன்னதிகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து இருந்தனர். திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி 12-ந்தேதி வரை கோவில் வளாகத்தில் தினமும் பரத நாட்டியம் உள்பட கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரிகள் நடைபெறுகிறது.

Next Story