ஆற்றில் குளிக்க சென்ற போது சம்பவம் சிறுமி பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது


ஆற்றில் குளிக்க சென்ற போது சம்பவம் சிறுமி பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2018 3:45 AM IST (Updated: 10 Dec 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 15 வயது சிறுமியும், அவரது தோழியுமான 13 வயது சிறுமியும் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அங்கு முட்புதரில் அமர்ந்து 4 வாலிபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்கள் சிறுமிகளை பார்த்ததும், அவர்களை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது 13 வயது சிறுமி அங்கிருந்து தப்பி ஓடினாள். 15 வயது சிறுமி அவர்களிடம் மாட்டி கொண்டாள். உடனே பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து மிரட்டினர். இதனால் சிறுமி மிரண்டு போனாள். அப்போது 2 வாலிபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். மற்ற 2 பேர் யாரும் வருகிறார்களா? என காவலுக்கு நின்றனர்.

இதற்கிடையே தப்பி ஓடிய சிறுமி இது பற்றி பொதுமக்களிடம் கூறினார். உடனே அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்களை கண்டதும், வாலிபர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்தது அதே பகுதியை சேர்ந்த மகேஷ், பாலு என்பதும், அவர்களுடன் விஜய், சூர்யா உள்ளிட்டோர் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் சகோதரி ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கோட்.டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மும்தாஜ்பேகம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில் விஜய், சூர்யாவை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மகேஷ், பாலுவை தேடி வருகிறார்கள். மகேஷ் மீது கார் திருட்டு வழக்கும், பாலு மீது ஸ்ரீரங்கத்தில் அடிதடி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 4 பேரும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணலை திருடி விற்பனை செய்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Next Story