17 வயது சிறுமியை 4 முறை கர்ப்பிணியாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது
காஞ்சீபுரம் அருகே 17 வயது சிறுமியை 4 முறை கர்ப்பிணியாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த மேலக்கோட்டையூரை சேர்ந்த 45 வயதுக்காரர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவருக்கு மனைவியும், 17 வயது மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர். மனைவி வேறு ஒரு வீட்டில் வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கம் உள்ள அவர், ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னுடைய தாயையும், தம்பியையும் கொன்றுவிடுவேன் என்று தனது 17 வயது மகளை மிரட்டி தொடர்ந்து கற்பழித்து வந்தார். இதில் கர்ப்பம் அடைந்த தனது மகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். தற்போதும் மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதில் அவரது மகள் 4–வது முறையாக கருவுற்றார். தனது தந்தையின் பாலியல் துன்புறுத்தலில் தனது வாழ்க்கை சீரழிந்ததை நினைத்து மனமுடைந்த அந்த சிறுமி நேற்று மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து பெற்ற மகளையே கற்பழித்து 3 முறை கருக்கலைப்பு செய்து, 4–வது முறையாக கர்ப்பமாக்கிய அவரை போக்சோ சட்டத்தின் கீழ் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி கைது செய்து விசாரித்து வருகிறார்.