பெண்களை அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை இளைஞர்கள் முற்றுகை


பெண்களை அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை இளைஞர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Dec 2018 4:15 AM IST (Updated: 10 Dec 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

பெண்களை அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையில், அக்கட்சியினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு முன் நின்று கொண்டு ஒருவர் பெண்களை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டுள்ள வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப்களில் வைரலாக பரவிவருகிறது. அவருடைய அந்த நடவடிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு துளியும் தொடர்பு இல்லை. அந்த நபர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் இல்லை. அந்த வீடியோ பதிவினை திட்டமிட்டு உள்நோக்கத்தோடு யாரோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் இளமாறன் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

முற்றுகை

இந்த நிலையில் மீன்சுருட்டி பகுதியில் உள்ள அனைத்து சமுதாய இளைஞர்கள் நேற்று மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், பெண்களை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டு வீடியோ வெளியிட்ட நபரை விரைவில் கைது செய்து விடுவோம் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு புகார் மனுவை போலீசாரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story