வாழப்பாடி அருகே பள்ளி ஆசிரியரை கடத்திய 2 பேர் கைது 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு
வாழப்பாடி அருகே பள்ளி ஆசிரியரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
வாழப்பாடி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 30). இவரது மனைவி நேயா. இவர்களுக்கு சாய் ரித்விக் (1½) என்ற மகன் உள்ளான். மணிகண்டன் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்தோடு வாழப்பாடியில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து சிலர், கஜா புயலால் பாதித்தவர்களுக்கு உதவிகள் செய்யும் படி வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவலை அனுப்பினர். நேற்று முன்தினம் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிய 5 பேர் ஒரு காரில் பள்ளிக்கு சென்று மணிகண்டனை சந்தித்து பேசினர். அப்போது அவர்களை ஒரு கடைக்கு அழைத்து சென்ற மணிகண்டன், மெழுகுவர்த்தி வாங்கி அவர்களுக்கு கொடுத்து உள்ளார்.
பின்னர் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளை வழி மறித்து மணிகண்டனை காரில் கடத்தி சென்றனர். பின்னர் மணிகண்டனை கடத்தி வைத்து உள்ளோம். எனவே ரூ.10 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறோம் என்று அவரது மனைவி நேயா மற்றும் தந்தை ராஜேந்திரன் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டினர்.
இது குறித்து நேயா வாழப்பாடி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சூர்யமூர்த்தி உத்தரவின் பேரில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் தஞ்சைக்கு விரைந்து சென்றனர். பின்னர் தஞ்சை போலீசாருடன் தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடத்தல் கும்பலை தேடினர்.
அப்போது கறம்பயம் பகுதியில் ஆசிரியர் மணிகண்டனை மீட்டனர். மேலும் அங்கு ஒரு முட்புதரில் இருந்து வெளியில் ஓடி வந்த கடத்தலில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயவீரன் என்ற வீரன் என்பவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். இதனிடையே நேற்று அவரை கைது செய்த போலீசார், ஆசிரியர் கடத்தல் தொடர்பாக பேராவூரணியை சேர்ந்த மகேஷ் (22) என்பவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்திய போது இந்த கடத்தல் சம்பவத்தில், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சந்தோஷ், பேராவூரணியை சேர்ந்த மணியரசன், நந்தகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்டோபர், பாலமுருகன் ஆகிய 5 பேர் ஈடுபட்டு இருப்பதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்திற்கு தலைவர்களாக செயல்பட்ட சந்தோஷ், மணியரசன் ஆகிய 2 பேர் கந்தர்வகோட்டை பகுதியில் ஏற்கனவே ஒருவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story