ரே‌ஷன்கடையில் கிராம மக்கள் முற்றுகை


ரே‌ஷன்கடையில் கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Dec 2018 4:30 AM IST (Updated: 10 Dec 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

முத்துவயல் கிராமத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் ரே‌ஷன்கடையில் முற்றுகையிட்டனர்.

போகலூர்,

பரமக்குடி தாலுகா போகலூர் யூனியன் சத்திரக்குடி அருகே உள்ளது முத்துவயல் கிராமம். இங்குள்ள வடக்கு தெருவில் 350–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் ரே‌ஷன்கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் இங்குள்ள ரே‌ஷன்கடையில் கடந்த 2 மாதமாக எவ்வித பொருட்களும் வழங்கப்படவில்லையாம்.

ஆனால் அனைவரது செல்போன் எண்களுக்கும் பொருட்கள் வினியோகிக்கப்பட்டதற்காக குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது. இதுகுறித்து கேட்பதற்காக பொதுமக்கள் ரே‌ஷன்கடை விற்பனையாளரை பார்க்க செல்லும்போதெல்லாம் கடை பூட்டியே கிடப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ரே‌ஷன்கடை திறந்திருந்ததை தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் திரண்டு சென்று கடையில் முற்றுகையிட்டனர். அப்போது தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எதுவும் வழங்கப்படாததால் குடும்ப அட்டை தேவையில்லை என்று கூறி அதனை ஒப்படைத்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போதுள்ள பொருட்களை வாங்கிச்செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்தாராம். அதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கான பொருட்களை வாங்கிச்சென்றனர். அப்போது குறைந்தஅளவே பொருட்கள் வினியோகிக்கப்பட்டதால், வரும் காலங்களில் இதே நிலைமை தொடருமானால் அனைத்து மக்களையும் திரட்டி ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை திரும்ப ஒப்படைத்து விடுவோம் என்று கூறிச்சென்றனர்.


Next Story