துறையூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


துறையூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 2018-12-10T02:13:41+05:30)

துறையூரில் 2 பேர் வீடுகளில் 10 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போயின. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் தங்கராஜ். ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய வீட்டின் மாடியில் சதீஸ்குமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தங்கராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார்.

இதேபோல் சதீஸ்குமார் வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன் தனது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை தங்கராஜ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள் மாயமாகியிருந்தன. ஆள் இல்லாததை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

மேலும் சதீஸ்குமார் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story