ஊதியக்குழு, பதவி உயர்வு முரண்பாடுகளை களைய நடவடிக்கை


ஊதியக்குழு, பதவி உயர்வு முரண்பாடுகளை களைய நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2018 4:15 AM IST (Updated: 10 Dec 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஊதியக்குழு, பதவி உயர்வு முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக பட்டதாரி பொறியாளர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பட்டதாரி பொறியாளர் சம்மேளனத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. சம்மேளன மாநில தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளே இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் ஏழாவது ஊதியக்குழுவிலும் அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் தவறாக கணக்கிட்டு இருப்பதால் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வது. பி.இ. முடித்து விட்டு உதவி பொறியாளராக பணியில் சேருபவர்களுக்கு 6 ஆண்டுகளில் உதவி மேலாளர் பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை. மாறாக பொறுப்பு உதவி மேலாளராக தான் பதவி வழங்கப்படுகிறது. இந்த முரண்பாட்டை களைய வேண்டும்.

மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர்களுக்கும் சலுகைகள், வார விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும். இளநிலை பொறியாளர், பணிமனை போர்மேன்களுக்கு வழங்கப்படுவது போல் உதவி பொறியாளர்களுக்கும் இரவு நேரப்படி வழங்க வேண்டும். இல்லை என்றால் உதவி பொறியாளர்களுக்கு பகல் பணி மட்டும் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனுவாக கொடுப்பது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சென்னை, கும்பகோணம், மதுரை, நெல்லை, கோவை, விழுப்புரம், சேலம் மண்டலங்களில் இருந்தும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்தும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story