நெல்லையில் தொடங்கியது இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்பு
இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நெல்லையில் நேற்று தொடங்கியது. இதில் 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர்.
நெல்லை,
இந்திய விமானப்படையின் ஏர்மேன் குரூப் ‘ஒய்‘ தொழில்நுட்பம் இல்லாத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான தகுதி பிளஸ்-2 தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 1998-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதிக்கு பிறகும், 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதிக்குள்ளும் பிறந்து இருக்க வேண்டும். திருமணம் ஆகாத இளைஞர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று தொடங்கியது.
வேலூர், சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. இன்றும் (திங்கட்கிழமை) தேர்வு நடக்கிறது. இதேபோல் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், குமரி, அரியலூர், கடலூர், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம், பெரம்பலூர், சேலம், நீலகிரி, தேனி, திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கும் வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கிறது.
நேற்று சென்னை, வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான உடல்தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினமே இளைஞர்கள் நெல்லைக்கு வந்துவிட்டனர். நேற்று அதிகாலை 5 மணிக்கே வ.உ.சி.மைதானம் முன்பு இளைஞர்கள் திரண்டனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் அவர்களை மைதானத்திற்கு வெளியே முதலில் அமரவைத்தனர். பின்னர் வரிசையாக மைதானத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.
இதனால் மைதானம் முழுவதும் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விமானப்படை கமாண்டிங் அதிகாரி சைலேஷ்குமார் தலைமையில் வந்து இருந்த விமானப்படை அதிகாரிகள், இளைஞர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். பின்னர் அவர்களின் உயரம், உடல் எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடங்கள் 45 வினாடிக்குள் கடக்க வேண்டும். 20 முறை உட்கார்ந்து எழுந்திருத்தல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு எழுத்து தேர்வும், பின்னர் மனநல தேர்வும் நடத்தப்பட்டது.
தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற இளைஞர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தேர்வையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மைதானத்திற்குள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த தேர்வை நெல்லை உதவி கலெக்டர் மணிஷ்நாரணவரே பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து கொடுத்துள்ளது. உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன‘ என்றார்.
சென்னை, வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நெல்லைக்கு வந்ததால் இங்குள்ள அனைத்து விடுதிகளிலும், பஸ்நிலையம், ரெயில் நிலையத்திலும் இளைஞர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Related Tags :
Next Story