டாஸ்மாக் பாரில் போலி மது விற்பனை: கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேர் கைது


டாஸ்மாக் பாரில் போலி மது விற்பனை: கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 9:40 PM GMT)

டாஸ்மாக் பாரில் போலி மது விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு அருகே பார் அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பு மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, போலி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து, பாரின் பின் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 100 போலி மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பார் உரிமையாளர் சேம்ராஜ், ஊழியர்கள் ரவி, கிருஷ்ணபிரசாத், அனுபிரசாத் ஆகியோரை கைது செய்தனர்.

இதனையடுத்து போலி மதுவை தயாரித்தது யார்? நீங்களே தயாரித்தீர்களா? அல்லது யாரேனும் உங்களுக்கு சப்ளை செய்தார்களா? என்று பார் உரிமையாளர் சேம்ராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போது, ஆரல்வாய்மொழி நெசவாளர் தெருவை சேர்ந்த ஜெயசீலன் (வயது 34) என்பவர் தான் போலி மதுவை தனக்கு சப்ளை செய்ததாகவும், அதனை பாரில் வைத்து விற்பனை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய பாஸ்கர் தலைமையிலான போலீசார் ஆரல்வாய்மொழிக்கு சென்று ஜெயசீலன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அந்த வீட்டில் கேன்களில் போலி மது பானங்கள், மது பாட்டில்கள், மது பாட்டிலில் ஒட்டப்படும் லேபிள்கள் போன்றவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி சகாயஷீபா (26) ஆகியோரை கைது செய்தனர்.

ஜெயசீலனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கேரளாவில் போலி மதுவை சிலர் தயாரிப்பதாகவும், அதனை வீட்டுக்கு வாங்கி வந்து, அங்கேயே மது பாட்டில்களில் நிரப்பி லேபிள் ஒட்டி சில இடங்களுக்கு சப்ளை செய்ததாகவும் தெரிவித்தார். போலி மதுவை இதுவரை சப்ளை செய்த இடங்கள் என்னென்ன என்ற பட்டியலையும் அவர் போலீசாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஜெயசீலனிடம் இருந்து ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஜெயசீலனுக்கு காலி மது பாட்டில்களை வினியோகம் செய்த ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த சுயம்பு என்பவரும் கைது செய்யப்பட்டார். ஜெயசீலன் கேரளாவில் போலி மது வாங்கிய இடத்தையும், சப்ளை செய்தவர்கள் விவரத்தையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

Next Story