லோடு ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதல்: மீன் வியாபாரி-டிரைவர் சாவு வல்லநாடு அருகே பரிதாபம்
வல்லநாடு அருகே நின்று கொண்டு இருந்த லோடு ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரியும், டிரைவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர.
ரீவைகுண்டம்,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா தெற்கு கரந்தானேரி வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் கணேசன் (வயது 53). மீன் வியாபாரி. இவரும், சக மீன் வியாபாரிகளான நாங்குநேரி முதலைகுளத்தை சேர்ந்த பால்பாண்டி மகன் முத்துகுட்டி (47), அதே ஊரை சேர்ந்த இசக்கிதாய் ஆகியோர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றனர். அங்கு மீன்களை வாங்கிக் கொண்டு லோடு ஆட்டோவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெல்லைக்கு திரும்பி கொண்டு இருந்தனர். லோடு ஆட்டோவை நாங்குநேரி முதலைகுளத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராஜா (30) ஓட்டி சென்றார்.
நள்ளிரவு 1 மணிக்கு தூத்துக்குடி- நெல்லை பைபாஸ் ரோட்டில் வல்லநாடு அருகே தனியார் சேம்பர் எதிரில் சென்றபோது லோடு ஆட்டோ டயர் பஞ்சர் ஆனது. இதனால் டிரைவர் ராஜா வண்டியை சாலை யோரமாக நிறுத்திவிட்டு மாற்று டயரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு முத்துகுட்டி உதவிகள் செய்து கொண்டு இருந்தார். மற்ற 2 பேரும் லோடு ஆட்டோவை விட்டு சற்று தொலைவில் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு நெல்லை நோக்கி ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லோடு ஆட்டோ மற்றும் டயரை பொருத்திக் கொண்டு இருந்த ராஜா, முத்துகுட்டி ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் முத்துகுட்டி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ராஜா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உயிருக்கு போராடிய ராஜாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிர் இழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த முறப்பநாடு போலீசார், இந்த விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் நடுக்கூட்டுடன்காட்டை சேர்ந்த கணபதி மகன் சவுந்தரராஜனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story