திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி நண்பர் படுகாயம்


திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-10T04:10:27+05:30)

திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு விஜயநாராயணத்தை சேர்ந்தவர் பூலையா. இவருடைய மகன் மாணிக்கராஜா (வயது 21). அதே ஊரைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் சுகன் (20). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தெற்கு விஜயநாராயணத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை மாணிக்கராஜா ஓட்டினார். மோட்டார் சைக்கிள் திசையன்விளை அருகே உள்ள பட்டரைகட்டிவிளை விலக்கு பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, பின்னால் ஒரு கார் வந்தது. கண் இமைக்கு நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மாணிக்கராஜா பரிதாபமாக இறந்தார். சுகன் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த சங்கனாங்குளத்தை சேர்ந்த சுப்பையாவை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story