போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் திருப்பூருக்குள் நுழைய தடை நேரம் நீட்டிப்பு


போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் திருப்பூருக்குள் நுழைய தடை நேரம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2018 4:28 AM IST (Updated: 10 Dec 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் திருப்பூருக்குள் நுழைய தடை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூரில் வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. அரசு பஸ் மற்றும் தனியார் பஸ், பள்ளி வாகனங்கள், நிறுவனங்களுக்கு பின்னலாடை சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் என அதன் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக திருப்பூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. திருப்பூரில் பிரதான ரோடுகள் மட்டுமின்றி சிறு, சிறு வீதிகள் உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் சில நேரங்களில் சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களின் வருகை காரணமாக நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதனை தவிர்க்க காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக சரக்கு வாகனங்கள் திருப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே போக்குவரத்து நெரிசலை மேலும் குறைக்கும் விதமாக காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனரக வாகனங்கள் திருப்பூருக்கு நுழைய தடை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 6 சக்கர கனரக சரக்கு வாகனங்கள், நடுரக வாகனங்களுக்கு பொருந்தும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருப்பூர் மாநகர் பகுதியில் ஆங்காங்கே விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது.





Next Story