பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை


பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Dec 2018 5:15 AM IST (Updated: 10 Dec 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காமநாயக்கன்பாளையம்,

பல்லடம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு மஞ்சுளா(20) என்ற மகளும், 13 வயதில் ஒரு மகனும் இருந்தனர்.

திருமலைக்குமார் அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மஞ்சுளாவும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார்.

அப்போது அங்கு வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(21) என்பவரை மஞ்சுளா காதலித்தார். கடந்த 1½ ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை அறிந்த திருமலைக்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது மனைவி வசந்தா, மகள் மஞ்சுளா ஆகிய இருவரையும் சொந்த ஊரான வால்பாறை அருகே உள்ள முடீசுக்கு அனுப்பி வைத்தார். காதலனை பிரிந்த மஞ்சுளா செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசி காதலை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மஞ்சுளா பல்லடம் உப்பிலிபாளையத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்தார். பின்னர் மறுநாள் அங்குள்ள தனது காதலன் கார்த்திகேயன் வீட்டுக்கு சென்றார். இவர்களது காதலுக்கு கார்த்திகேயன் வீட்டில் சம்மதம் தெரிவித்து விட்டதால் அவரை ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று காதலன் வீட்டில் தங்கி இருந்த மஞ்சுளா திடீரென தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பதறி போன கார்த்திகேயன் குடும்பத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மஞ்சுளாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இருப்பினும் போலீசார் மஞ்சுளாவின் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனையின் முடிவுக்கு பிறகு முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.



Next Story