காலை நேரத்தில் நாமக்கல் நகருக்குள் இயக்கிய லாரி சிறைபிடிப்பு பொதுமக்கள் போராட்டம்
நாமக்கல்லில் காலை நேரத்தில் நகருக்குள் இயக்கிய சரக்கு லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில்களில் வரும் பொருட்கள் லாரிகள் மூலம் ராமாபுரம்புதூர் வழியாக முதலைப்பட்டி புறவழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த லாரிகள் காலை, மாலை நேரத்தில் செல்வதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. மேலும் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. அவற்றை கருத்தில் கொண்டு காலை 10 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள் மட்டுமே ராமாபுரம்புதூர் வழியாக லாரிகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து உள்ளனர். அதற்கு லாரி உரிமையாளர்களும் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு சரக்கு ஏற்றிய லாரிகள் ராமாபுரம்புதூர் வழியாக சென்றன. அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு லாரியை சிறைபிடித்தனர். ஒப்புகொண்டபடி இல்லாமல் தொடர்ந்து லாரிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சிறைபிடிப்பு போராட்டம் நடந்தது.
இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் காலை, மாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவது இல்லை என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சரக்கு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ஏற்றிச்சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story