விலையில்லா ஆடுகள் வழங்கியதில் குளறுபடி: தாலுகா அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா - காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

விலையில்லா ஆடுகள் வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி காட்டுமன்னார்கோவிலில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே கருணாகரநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் தமிழகம் அரசு சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விலையில்லா ஆடுகள் பெற்றவர்களில் பலர் தகுதியானவர்கள் இல்லை என்றும், எனவே பயனாளிகள் பட்டியல் தயார் செய்ததில் குளறுபடிகள் நடந்துள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து தாசில்தாரை சந்தித்து புகார் மனு அளிப்பதற்காக கிராம மக்கள் ஒன்று திரண்டு காட்டுமன்னார் கோவில் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தாசில்தார் சிவகாமசுந்தரி அங்கு இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த காட்டுமன்னார் கோவில் போலீசார் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story