படைப்புழு தாக்கிய பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


படைப்புழு தாக்கிய பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 10 Dec 2018 10:45 PM GMT (Updated: 10 Dec 2018 7:50 PM GMT)

படைப்புழு தாக்கிய பயிர்களுக்கு அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தரக்கோரி பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது மனு கொடுப்பதற்காக காரை (மேற்கு) மற்றும் (கிழக்கு), புதுக்குறிச்சி, சில்லக்குடி, வெங்கனம் (மேற்கு), பில்லாங்குளம், நெற்குணம், கீழப்புலியூர், எறையூர் நரிக்குறவர் காலனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் மக்காச்சோளம் அதிகம் விளைகிறது. இந்த ஆண்டு விவசாயிகள் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத சூழ்நிலையில் தற்போது மக்காச்சோள பயிரில் படைப் புழு தாக்கியதால் ஏக்கருக்கு ஒரு மூட்டை மக்காச்சோளம் கூட கிடைக்காத சூழ்நிலையில் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என்றும், மேலும் அழுகல் நோயால் சின்ன வெங்காய பயிரும், பூச்சி கொல்லி நோயால் பருத்தி பயிரும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மக்காச்சோளம், சின்ன வெங்காயம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழக அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முற்றுகையிட்ட விவசாயிகள் படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிர், பாதிக்கப்பட்ட பருத்தியும் கையில் கொண்டு வந்திருந்தனர். பின்னர் விவசாயிகளில் சிலர் மனுக்களை மொத்தமாக கொண்டு சென்று கலெக்டர் சாந்தாவை சந்தித்து கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

பெரம்பலூர் மாவட்ட டயர் வண்டியில் மணல் அள்ளுபவர்கள் சார்பில் மருதமலை என்பவர் கொடுத்த மனுவில், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் டயர் வண்டியில் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதி இல்லை. இதனால் டயர் வண்டியில் மணல் அள்ளு பவர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூரில் உள்ள பெரியாற்றில் டயர் வண்டியில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story