9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது


9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 11 Dec 2018 4:00 AM IST (Updated: 11 Dec 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கியது.

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நேற்று தொடங்கி தமிழ் தேர்வு நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலையில் தொடங்கிய தமிழ் தேர்வு மதியம் வரை நடந்தது. மதியம் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தேர்வு நடந்தது. 9, 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு வரை மாணவ- மாணவிகள் தேர்விற்காக ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தனர். தேர்வு எழுத தேர்வறைக்கு சென்ற மாணவ- மாணவிகளை அறை கண்காணிப்பாளரான ஆசிரியர்கள் சோதனை செய்த பின்னர், உள்ளே அனுமதித்தனர். தேர்வு எழுத எழுதுபொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 900-க்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்விற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா நேரு ஆகியோர் செய்திருந்தனர். தேர்வு அறையில் காப்பி அடிக்கிறார்களா என்பதனை கண்காணிக்க பறக்கும் படை போல ஆசிரியர்கள் தேர்வு நடக்கும்போது மாணவ- மாணவிகளை கண்காணித்து வந்தனர். மேலும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத உள்ளிட்ட மாற்றுத்திறனாளி 15 மாணவ- மாணவிகளுக்கு தேர்வு எழுத வசதியாக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு உதவியாக தேர்வினை, உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசிரியைகள் எழுதினர். தமிழ் தேர்வு எழுதி முடித்த மாணவ- மாணவிகள் கேள்வித்தாள் எளிதாக இருந்ததாகவும், நன்றாக தேர்வு எழுதியிருப்பதாகவும் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஆங்கில தேர்வு நடைபெறுகிறது. 9, 10-ம் வகுப்புகளுக்கு இன்று தமிழ் 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. வருகிற 22-ந் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 23-ந் தேதியில் இருந்து விடுமுறை விடப்படுகிறது.

Next Story