“கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. தலைமை முடிவு செய்யும்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


“கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. தலைமை முடிவு செய்யும்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2018 3:45 AM IST (Updated: 11 Dec 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

“தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை முடிவு செய்யும்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்பட்டி, 

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களை ஏற்று கொள்வோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். அதனை ஏற்று, பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால், அ.தி.மு.க.வில் இணைத்து கொள்ள தயாராக உள்ளோம்.கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியேனும் வந்தால், அதுகுறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மேகதாது அணை கட்டுவதற்கு புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். காவிரி மேலாண்மை வாரிய விதிகளின்படி, காவிரியில் ஒரு மாநிலத்தில் அணை கட்டுவதற்கு, காவிரி பாயும் மற்ற 4 மாநிலங்களிடம் இருந்து கருத்துகளை கேட்டறிய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் தமிழக அரசுக்கு ஒதுக்கிய தண்ணீரில் ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூட குறையக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகர மக்களின் பொழுதுபோக்குக்காக துடுப்பு படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் படகு சவாரி செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.200 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகப்படியான கட்டணம் என்று மக்கள் நினைத்தால், அதனை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது. அரசாணை மூலம் ஆலை மூடப்பட்டு உள்ளது. அரசின் உச்சபட்ச அதிகாரம் அரசாணைதான். அரசாணையில் செல்லுகிற அரசாணை, செல்லாத அரசாணை என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. அதைத்தான் வைகோ போன்றவர்கள் இந்த அரசாணை செல்லுமா என்று சந்தேகத்தை எழுப்பி மக்கள் மத்தியில் பீதியை கிளப்புகிறார்கள். ஆலை மூடப்பட வேண்டும் என்று அரசாணை இருந்தால், அரசு எடுத்த முடிவு அதுதான். அதன்படி ஆலையை மூடித்தான் ஆகவேண்டும். அதன்படி ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது. குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இன்றும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.

முதலீடு செய்த ஆலை நிர்வாகத்தினர் பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு முறையீடுகளுக்கு செல்கின்றனர். அவர்களை தடுக்க எந்த சட்டமும் இல்லை. அந்த ஆலைக்கு எதிரான 22 ஆண்டு கால போராட்டம் எங்கள் ஆட்சி காலத்தில் முடிவுக்கு வந்து உள்ளது. இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். 

Next Story