கோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்


கோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 11 Dec 2018 12:00 AM GMT (Updated: 10 Dec 2018 8:57 PM GMT)

கோபியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். கோபி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

கோபி எஸ்.டி.என். காலனி ஜி.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த பகுதியில் வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருவதால், மாணவ –மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் குடிமகன்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜி.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் சலவை மற்றும் சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

நாங்கள் அந்தியூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாடகை வீட்டில் சுமார் 109 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஏழை, எளிய மக்களாகிய எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர் அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

சித்தோடு அருகே உள்ள குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது:–

நான் வீட்டில் ரொட்டி, பிஸ்கெட், பன் போன்றவற்றை தயாரித்து வியாபாரம் செய்து வந்தேன். இந்த நிலையில் எனது மகன்கள் ஈஸ்வரன், பழனிச்சாமி ஆகியோர் என்னுடைய வீடு, கார் மற்றும் 2 வேன்களை அபகரித்து கொண்டு என்னையும், எள் மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இதனால் தற்போது நாங்கள் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே எனது மகன்களிடம் இருந்து எனக்கு சொந்தமான வீட்டை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

ஈரோடு கொல்லம்பாளையம் ராமமூர்த்தி வீதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘ராமமூர்த்தி வீதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த ஒரு மாதமாக எங்கள் வீதியில் உள்ள வீடுகளின் ஆழ்குழாய் கிணற்று நீர் மாசுபட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் எந்த உபயோகத்திற்கும் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

எனவே, நிலத்தடி நீர் திடீரென மாசுபட்டதற்கான காரணம் குறித்து கண்டறிந்து தீர்வுகாண வேண்டும். மேலும், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரையில், எங்கள் பகுதிக்கு தினமும் ஒரு மணி நேரம் குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘அந்தியூர் வாரச்சந்தை இடமாற்றம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். மேலும் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது’ என்று கூறி இருந்தனர்.

கோபி அருகே உள்ள கலிங்கியம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரை அவரது உறவினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு தூக்கிக்கொண்டு வந்தனர். பின்னர் பழனி கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘நான் சம்பவத்தன்று எனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தபோது எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் என்னை கொலை செய்யும் நோக்கில் என்மீது காரை மோதினார். இந்த விபத்தில் எனது வலது கால் துண்டாகிவிட்டது. இதுகுறித்து நம்பியூர் போலீசார், விபத்து என்று வழக்குப்பதிவு செய்து விட்டனர். எனவே என்னை கொலை செய்யும் நோக்கில் என் மீது காரை மோதியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு அய்யனாரப்பன் கோவில் வீதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் மேல் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது’ என்று கூறி இருந்தனர்.

கடம்பூர் பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘கடம்பூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைய வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது’ என்று கூறி இருந்தார்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 254 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கதிரவன், அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து 7 பேருக்கு விலையில்லா தையல் எந்திரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story