20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்தம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Dec 2018 5:00 AM IST (Updated: 11 Dec 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள் பதவியை மீண்டும் தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும். கணினி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களுக்கு கழிப்பறை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கூறியதாவது:–

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். எனினும் எங்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே எங்கள் சங்கத்தின் முடிவுபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 186 கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். எங்களது போராட்டத்தால் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

எங்களது கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வருகிறோம்.

இவர் அவர்கள் கூறினார்கள்.

கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேற்று மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்கள் பூட்டப்பட்டு கிடந்தன.

கோபி மற்றும் நம்பியூர் வட்டாரத்தை சேர்ந்த 67 கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக கோபி தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்டார தலைவர் ஜெயந்தன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

அதன்பின்னர் கோபி பஸ்நிலையம், அரசு ஆஸ்பத்திரி என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோரிக்கை விளக்கம் எழுதப்பட்ட நோட்டீசுகளையும் கிராம நிர்வாக அதிகாரிகள் வழங்கினார்கள்.


Next Story