கருங்கல் அருகே மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு


கருங்கல் அருகே மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 11 Dec 2018 3:45 AM IST (Updated: 11 Dec 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக காவலாளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கருங்கல்,

கருங்கல் அருகே குற்றிப்பாறவிளை பகுதியை சேர்ந்தவர் ரசலையன் (வயது 60). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகளுக்கு வருகிற 28-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி ரசலையன் சொந்த ஊருக்கு வந்து மகளின் திருமண ஏற்பாடுகளை செய்தார். மகளின் திருமணத்துக்காக 15 பவுன் நகைகளை வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ரசலையன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்துக்கு சென்று விட்டார். மேலும் வீட்டின் சாவியை ஜன்னல் ஓரம் வைத்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர் அந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தார். பின்னர் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடி சென்று விட்டார். ஆலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ரசலையன், மகளின் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த நகைகளை காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து அவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்மநபரை தேடிவருகின்றனர்.

Next Story