குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரியிடம் புயல் நிவாரண நிதி வழங்கிய மாணவர்கள்
சிவகங்கையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரியிடம் மாணவர்கள் புயல் நிவாரண நிதியை வழங்கினர்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், ரேஷன் கார்டு கோருதல், இலவச தையல் இயந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு மற்றும் இதர மனுக்கள் உள்பட 323 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது தேவகோட்டை தாலுகா தானாவயல் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து, இவருடைய மகன் ராமச்சந்திரன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:– தங்களிடம் காரைக்குடியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கடந்த 2015–ம்ஆண்டு சவடு மண் குவாரி அமைக்க அனுமதி வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சத்தை வாங்கி கொண்டு அனுமதி பெற்ற தராமலும், வாங்கிய பணத்தையும் திரும்ப தர மறுக்கிறார். எனவே தங்களின் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை காமராஜர் காலனியில் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கஜா புயலால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் தங்களின் சேமிப்பு பணம் ரூ.4 ஆயிரத்தை புயல் நிவாரண நிதியாக கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்.