கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பயிர்கள் சேதம்கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர், இளையரசனேந்தல் ஆகிய பிர்க்காக்களில் விவசாயிகள் உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டனர். தற்போது பயிர்களில் படைப்புழு என்னும் குருத்துப்பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளது. இவைகள் பயிர்களின் தண்டுபகுதியை கத்தரித்தும், கதிர் மணிகளை உறிஞ்சியும் சேதப்படுத்துகின்றன. இதனால் ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் வரையிலும் செலவு செய்து பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இழப்பீடுஎனவே படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு பிரீமியத்தொகையை அரசே செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோரிக்கை மனுஇதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வரதராஜன், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆதிமூலம், ஆர்.சுப்புராஜ், கே.சுப்புராஜ், கெங்காராஜ், சேதுராஜ் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள், படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த பயிர்களை கைகளில் எடுத்து வந்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் தங்கய்யாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.
முன்னதாக கோவில்பட்டி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.